The Kantha Purana Yoga Tradition - கந்த புராண யோக மரபு
இது ஒரு சமூகத்தின் ஆன்மீக முன்னேற்றத்தின் முதல் படி! புராணங்கள் அகத்தினைத் தூய்மைப் படுத்தும் உருவகக் கதைகளாக உணர்தல்! இந்தக் கதைகளைக் கேட்கும் விழிப்புள்ள ஆன்மா தனக்குள்ளே நடைபெறும் அசுர குணங்களை அறிந்து தூய்மைப்படுத்தும் நிலைக்குச் செல்ல வேண்டும். இப்படி அகவயப்படும் போது மாத்திரமே அந்த சமூகம் தீயகுணங்களை நீக்கி உயர்ந்த பண்புள்ள சமூகமாக மாறும்!
இப்படி புராணக்கதைகள் அகவயப்படுத்தாத போது வெறுமனே வெளிச்சடங்குகளாகவும், பகட்டிற்கும் பெருமைக்கும் உரியவையாக மாறி குரோதம் வளர்க்கவும் பாவிக்கப்படலாம்!
இதனால்தான் ஆன்மீகம், பக்திமான் என்று நாம் நம்பும் பலரும் அகத்தில் தூய்மையில்லாத பகட்டு ஆசாமிகளாக இருக்கக் காண்கிறோம்!
ஆகவே கந்தபுராணத்தை ஒரு அகவழிப் பயணமான யோக புராணமாகக் காணுதல் அவசியம்!
பொதுவாக நாம் கந்தபுராணம் என்று கேட்டால், முருகப்பெருமான் சூரபத்மனை அழித்த வீரகாவியம் என்று நினைக்கிறோம்.
ஆனால் ஒரு உண்மையான யோகி அதைப் படிக்கும்போது, அவர் அதில் வெளிப்பட்டிருப்பவை புறக்காட்சிகள் அல்ல — உள்காட்சிகளாக தனது யோக சாதனையின் பயணமாகப் பார்க்கிறார்.
அதாவது, கந்தபுராணம் ஒரு புராணம் மட்டுமல்ல; அது மனிதனின் உள் யோகப் பயணத்தைக் காட்டும் தெய்வீக வரைபடம்.
புராணம் தொடங்குவது சிவபெருமான் உமையுடன் கைலாசத்தில் யோகத்தில் ஆழ்ந்திருப்பதிலிருந்து.
இது ஒரு யோகியின் உள்நிலையைச் சுட்டுகிறது — ஆத்மா (சிவம்) தன் சித்தசக்தியுடன் (உமா) ஒன்றுபட்டு சமாதியில் இருக்கிறது.
இது சிவ–சக்தி ஐக்யம், அதாவது தன்னுள் மனம், பிராணன், சித்தம் அனைத்தும் ஒன்றாய்நிற்கும் பரம யோக நிலை.
புராணத்தில் சூரபத்மன் தேவர்களைத் துன்புறுத்துகிறான்.
யோக விளக்கத்தில், இது வெளி அசுரன் அல்ல;
அது மனிதனுக்குள் எழும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களின் விளைவு. ஒருவன் யோகத்தில் ஆழ்ந்து செல்லும் போது அவைகள் ஞானத்தை மூடி, தெய்வீக அறிவை (தேவர்கள்) வலிமையிழக்கச் செய்கின்றன.
இது ஒவ்வொரு யோகியுக்கும் நடக்கும் உள் போராட்டம்.
சூரபத்மனைக் கண்டு அஞ்சி தேவர்கள் வாசியை (வாயுதேவன்) சிவபெருமானிடம் அனுப்புகின்றனர்.
இது யோகியின் பிராணாயாமப் பயிற்சியை குறிக்கிறது.
பிராண சக்தி (வாசி) மேலே ஏறிச் சிவனை அடைய முயற்சிக்கிறது.
ஆனால் நந்தி (ருத்திர கிரந்தி) தடுத்து நிறுத்துகிறது — இது யோகி மனதின் விருத்திகளைக் கட்டுப்படுத்தாமல் வெறுமனே பிராணாயம சித்தியால் யோகத்தில் சித்தி பெற நினைக்கும் முயற்சி. எவரும் பிராணாயம - வாசி சித்தியால் ருத்திரக் கிரந்தி தாண்டிச் செல்லமுடியாது என்பதன் விளக்கம். பின்னர் பிரம்மா நந்திக்கு விளக்கம் கூற சிவனைக் காண அனுமதி என்பது மனவிருத்திகள் அடங்கிய நிலையிலேயே சிவ உணர்வைப் பெறமுடியும் என்ற நிலை!
சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து தீ வெளிப்படுவது, யோகியின் மனம் பிராணன் அடங்கிய நிலையில் சஹஸ்ராரத்தில் இருந்து எழும் சிவதேஜஸ். சக்தி நிபாதம்.
அது பிராண–அக்னியாக மாறி, சுஷும்னா நாடியில் இறங்கி சக்ரங்களில் பிரவாகிக்கிறது.
இதுவே “கங்கை எனும் சுழுமுனையில் அக்னியை செலுத்தல்” எனக் கூறப்படுகிறது.
கந்தபுராணத்தில் முருகன் சரவணப் பொய்கையில் பிறக்கிறார். அந்தப் பொய்கை என்பது யோகியின் உடல், அதில் உள்ள ஆறு தாமரைகள் —
மூலாதாரம் முதல் ஆஜ்ஞா வரை உள்ள ஆறு சக்ரங்கள்.
சிவதேஜஸ் அதில் விழுந்து ஒளியாக மலரும்போது, அந்த ஒளியே முருக சக்தி.
முருகன் பிறப்பது என்பது யோகியின் உள்அனுபவத்தில் ஞானத்தின் பிறப்பு.
அது “புலிங்கம்” எனப்படும் தீப்பொறி —
சிவனின் நெற்றிக்கண்ணில் எழும் ஞான ஒளி யோகியின் இதயத்தில் குழந்தைபோல வெளிப்படுகிறது.
அவன் சூரபத்மனை அழிப்பது – அந்த உள் அசுத்தங்கள் அழிந்து, ஆன்ம ஞானம் மலர்வதைக் குறிக்கிறது.
முருகன் சூரபத்மனை வதம் செய்வது, யோகியின் மலங்கள் அழியும் தருணம்.
சூரபத்மன் விலங்காக மாறி இறுதியில் முருகனின் வாகனமாகின்றான் –
இதுவே, அசுத்த சக்திகள் சுத்த சக்திகளாக மாறி யோகிக்கு உதவுவது என்ற உள் விளக்கம்.
கந்தபுராணத்தை யோக விளக்கமாகப் படிக்கும் போது,
அது ஒரு போர் கதை அல்ல,
அந்தரங்க யோகத்தின் (உள் போரின்) ஜ்ஞானப் பயணம் என வெளிப்படும்.
அதனால் உண்மையில் கந்தபுராணம் என்பது —
சூரபத்மனை வதம் செய்த வரலாறு அல்ல,
அவித்யையை அழித்து சிவஞானம் மலர்ந்த வரலாறு. 
Source FB - Shri Shakthi Sumanan
Comments
Post a Comment