Pulinga Murthy - புலிங்க மூர்த்தி அல்லது சிவதேஜஸ் மூர்த்தி

 இது ஒரு அரிய சிவயோக இரகசியம், முழுமையாகப் படித்து பதில் அளிக்கவும்.

முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து தோன்றியவர்.
புராணக்கதை வருமாறு:
சிவபெருமான் உமாதேவியாரை திருமணம் செய்து கைலாயத்தில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். ஆனால் சூரபத்மன் தேவர்களை, பிரம்ம, விஷ்ணுவை துன்புறுத்திக்கொண்டிருந்தான்.
எல்லாத் தேவர்களும் எம்மிடம் தபஸில்லை ஆகவே சிவபெருமானை வேண்டுவோம், அவர் எம்மைச் சூரபத்மனிடம் இருந்து காப்பாற்றுவார், ஆனால் முதலில் அவர் இருக்கும் நிலை என்ன என்று அறிய வாயுதேவனை அனுப்புவோம் என்று பிரம தேவர் கூற, வாயுதேவன் திருக்கையிலையிற்குள் செல்ல வாசலை அடைய அங்கு நந்தி தேவர் தடுத்து தள்ளி விட்டார்.
பின்னர் வாயுதேவர் நந்திக்கு தான் அனுப்பப்பட்ட காரணத்தை விபரிக்க தான் அனுமதி பெறாமல் உள்ளே புக முயன்றது தவறு என மன்னிப்பு கேட்க நந்திதேவர் கோபந்தணிந்து " உன்னை மன்னித்தோம், இங்கு நில்லாதே, சென்று விடு" என்று திருப்பி அனுப்பினார்.
நடந்ததை வாயுதேவன் பிரம்மனுக்கு கூற மீண்டும் அனைவரும் கைலாயத்தின் வாயிலை அடைந்து நந்தி தேவரைப் பணிந்து விண்ணப்பிக்க நந்தி தேவர் சிவபெருமானிடம் சொல்ல பெருமானார் அனைவரையும் உள்ளே வர அனுமதித்தார்.
உள்ளே வந்த பிரம்மாதி தேவர்கள் சிவபெருமானிடம் " தேவரீர், நீங்கள் உமையம்மையாரை திருமணம் செய்து நீண்ட யோக தபஸில் இருப்பதால் உங்களுக்கு நிகரான ஆற்றலுள்ள பிள்ளையினைத் தரவில்லை, இதனால் சூரபத்மனின் கொட்டம் அதிகரித்து துன்புறுகிறோம், ஆகவே உம்மைப் போல் ஒரு புதல்வதைத் தந்தருளுவீர் என வேண்டி நின்றனர்.
இந்த வேண்டுதலுக்கு செவி சாய்த சிவபெருமான் தனது ஐந்து முகங்களும் ஶக்தியின் முகமும் சேர்ந்த ஆறு முகங்களின் நெற்றிக்கண்ணிலிருந்து சிவதேஜஸ் ஆகிய அக்னிப் பொறிகளை வெளிப்படுத்தினார். இந்த அக்னியின் வெம்மையை எவரும் தாங்காமல் தவிக்க சிவபெருமான் வாயுவையும், அக்னியையும் அழைத்து இவற்றை கங்கையில் கொண்டு சேர்ப்பீர்களாக என்று உத்தரவிட்டார்.
இந்த சிவாக்கினியை கங்கையில் விட அங்கிருந்த சரவணப்பொய்கையில் உள்ள தாமரைகள் தாங்க கார்த்திகைப் பெண்கள் போசிக்க சுப்ரமணியர் தோன்றினார். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறியில் தோன்றியதால் புலிங்க மூர்த்தி என்று அழைக்கப்பட்டார். புலிங்கம் என்றால் தீப்பொறி என்று அர்த்தம். அந்த தீப்பொறிகள் சிவபெருமானின் தேஜஸ் என்பதால் சிவதேஜஸ் என்றும் அர்த்தம் !
இந்தக் கதை முழுவதும் ஒருவன் சிவயோகம் செய்யும் போது வரும் யோக நிலைகளின் விளக்கம்!

புலிங்க மூர்த்தியின் யோக விளக்கம்
கந்தபுராணம் ஒரு யோக புராணம்; ஆன்மா சிவகதி அடைவது எப்படி என்பதன் யோகவிளக்கமே கந்தபுராணச் செய்தி! அதன் முதல் படி புலிங்க மூர்த்தி எனப்படும் சிவதேஜஸ் மூர்த்தியின் விளக்கம்.
ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களால் உருவாகும் வினைகளால் ஒரு ஆன்மா அசுரத்துவம் பெறுகிறது. இதை வெல்ல தியானம் தவம் எனச் சாதனை செய்தாலும் சிவபரம்பொருளின் சக்தி நம்மில் பாயாமல், நமக்குள் முருகன் என்ற சக்தி உருவாகாமல் எம்மால் இவற்றை வெல்ல முடியாது! யோகம் பயில்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய ஒன்று யோகத்தின் முதல்பகுதி எமது முயற்சி, யோகத்தின் சித்தி ஶிவஶக்தியின் கருணை!
இந்தப் பதிவை படிக்க முன்னர் 05வது புலிங்க மூர்த்தி பற்றிய கதையைப் படிக்கவும்! அப்போதுதான் இங்கு சொல்லப்படுவது விளங்கும்!
ஓரு சாதகன் வெறுமனே தியானத்தில் அமர்வதால் மாத்திரம் அசுரத்தன்மையை வெல்லமுடியாது. அப்படி தியானத்தில் அமரும் போது ஆன்மாவின் ஒளி சஹஸ்ராரத்தில் ஒடுங்குவதால் கீழுள்ள மனம், உடல் என்பவற்றை மலங்களால் ஆன அசுரகுணங்கள் ஆட்டிப் படைக்கத் தொடங்கும். உண்மையில் ஒருவன் யோக சாதனை செய்ய என்று தொடங்கும் போதுதான் முன்னை விட அதிக அசுர இயல்பு பெற்றவனாக மாறத்தொடங்குவான். அவனுள் மறைந்து ஆழத்திலிருக்கும் பண்புகள் எல்லாம் வெளியே வரத்தொடங்கும்.
இதுவே சிவபெருமான் உமையுடன் கைலாசத்தில் யோகத்தில் ஆழ்ந்திருப்பது பரம சிவ நிலை — அதாவது, தன்னுள் உறைந்த சித்சக்தியுடன் (உமையுடன்) ஒன்றாய் தியானத்தில் இருப்பது. இது “சிவ–சக்தி ஐக்யம்” அல்லது “பரம யோகம்”. இதன் பொருள், யோகி தன்னுள் உள்ள சக்தியை மனம், பிராணன், சித்தம் என அனைத்திலும் ஒருமைப்படுத்தி நிற்கும் சமாதி நிலை. இப்படி ஆன்மாவின் ஆற்றல் ஒடுங்கியவுடன் மலங்களால் ஆன சூரபத்மன் விழித்துவிடுவான்.
சூரபத்மன் — ஆத்மாவை மறைக்கும் அசுத்த மாயைகள்
சூரபத்மன் என்பது வெளியில் உள்ள அசுரன் அல்ல; அது யோகியின் உள்ளே எழும் அஹங்கார–அவித்யா–காமம்–குரோதம் போன்ற ஆறு எதிர்மறை சக்திகள்.
அவை தெய்வீக அறிவை (தேவர்கள்) துன்புறுத்துகின்றன. இதனால் யோகியின் ஆன்மீக சக்தி அழிந்துபோகிறது.
இப்படி சூரபதுமனாகிய அசுர குணங்கள் எழும்பும் போது சாதகன் வாசி எனும் வாயுவை இயக்கி இதை வெல்லப்பார்க்கிறான். வாசியோகம், பிராணாயம பயிற்சிகள் நிலைகள் எல்லாம் இதில் அடங்கும். இதுவே கந்தபுராணக் கதையில் வாயு சிவபெருமானிடம் சென்றது என்பது.
இப்படிச் சென்ற வாயு பகவான் நந்தியால் திருப்பி அனுப்பப்பட்டார் என்ற நிலை என்ன?
வாசியோக பிராணாயம சாதனைகளால் பிரம்ம கிரந்தி, விஷ்ணுக்கிரந்தியைத் துளைத்து புருவமத்திவரை செல்லாலாம்! ஆனால் ருத்திரக்கிரந்தியாகிய புருவமத்தியில் இருக்கும் நந்தி தேவரைத் தாண்ட முடியாது! ஆகவே சாதகன் அறிந்து கொள்ள வேண்டியது, முச்சின், வாயுவின், பிராணனின் துணைகொண்டு புருவமத்தி வரைதான் செல்ல முடியும்! அதற்கு மேல் யோகத்தில் முன்னேற பிரம்மதேவர் நந்தியிடம் சரணடைய வேண்டும்.
அதன் பிறகு வாயுதேவன் சென்று பிரம்மதேவரை அழைத்து வந்து விளக்கம் கொடுத்து நந்திதேவரிடம் கைலாயம் புக அனுமதி பெற்றார் என்பது என்ன?
பிரம்மா எனப்து படைப்புச் சக்தியுடைய தூய மனம். இந்த மனம் புருவமத்தியில் வந்து நந்திதேவரிடம் சரணடைந்தால் மாத்திரமே கைலாயத்தில் சிவபெருமானைப் பார்க்க அனுமதி! ஆகவே இங்கு சிவபரம்பொருளின் அருளைப் பெற இரண்டு தகுதிகள் சுட்டிக் காட்டப்படுகிறது. ஒன்று வாயு சீராக்கி வாசி புருவமத்தி வரை வர வேண்டும், பிறகு மனம் விருத்திகள் இன்றி புருவமத்தியில் சரணடைய வேண்டும். இவை இரண்டும் சாத்தியமானால் ருத்திர கிரந்தி எனும் நந்தி தேவர் திறந்து கைலாயத்திற்கு வழி காட்டுவார்.
இப்படி மனமும், பிராணனும் அடங்கி சிவனைத் தரிசித்தால் அவர் தனது பஞ்ச வக்த்ரங்களிலும், ஶக்தியின் ஒரு முகமும் சேர்த்து ஆறு ஶக்தி நிபாதங்களை சிவதேஜஸாக சாதகனுக்கு அருள்வார்! இப்படிப் பெறப்படும் சிவ தேஜஸை சாதகனின் சாதாரண உடல் தாங்கமுடியாது. அதை அவன் கங்கை என்ற சுழுமுனையில் மாத்திரமே தாங்க முடியும். அப்படி அந்த சிவதேஜஸைச் செலுத்த அவனுக்கு வாயும், அக்னியும் துணைபுரிய வேண்டும்.
இப்படி சுழுமுனையில் செலுத்தப்படும் ஶிவஶக்தி தேஜஸ் ஆக்ஞா, விசுத்தி, அனாகதம், மணிப்பூரகம், சுவாதிஷ்டானம், மூலாதாரம் எனும் ஆறு தாமரைகளை மலர்விக்கும். இப்படி சிவ தேஜஸ் பெற்ற ஆறாதார விழிப்பே யோகியினுடைய புலிங்க என்ற அக்னி சரீரம்.
இந்த புதிய அக்னி சரீரத்தைக் கொண்டே அவன் தனது தாழ் அசுர இயல்புகளான சூரபத்மனை - மலங்களை வெல்ல முடியும்!
இவை ஆறையும் இணைக்கும் போது தோன்றும் ஆற்றல் அசுரவதம் செய்யக்கூடிய பேராற்றல். அந்த மூர்த்தி பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்!
Source - FB - Shri Shakthi Sumanan

Comments

Popular posts from this blog

Subramanya Prabhavam

Sishtacharam

Skanda Sashti Kavacham