Sakthidharar - subramnaya swaroopam
ஒவ்வொரு முருக உபாசகனும் முதலில் தன்னை சக்தியுடையவனாக்கிக் கொள்ள இந்த ரூபத்தை உபாசிக்க வேண்டும். சக்தியில்லை என்றால் வாழ்க்கை இல்லை! வாழ்க்கையில் வெற்றி இல்லை!
இந்த வடிவம் முருகன் பிரபஞ்சத்திலுள்ள எல்லாச் சக்திகளையும் ஆள்பவர் என்பதை விளக்கும்!
ஆன்மாக்களின் ஆணவ மலத்தைக் கெடுத்து, நான் வேறு நீ வேறல்ல என்ற முக்தி நிலை அருளி, ஐந்தொழில்களுக்கும் காரணமாயுள்ளதும், அறிவதற்கு, அறிந்துகொள்வதற்கும் மூலமாக இருக்கும் ஞானம்/வல்லமை சக்தி எனப்படும்.
சக்தி என்பது என்னவென்பதை நீருக்கு குளிர்ச்சியும், தீயிற்கு வெப்பமும், மரத்திற்கு உள்ளிருக்கும் வைரவும் எப்படி அவற்றின் செயலில் பிரிவு இல்லாமல் இருக்கிறதோ அப்படி ஶிவமும், ஶக்தியும் இயங்குகிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு அரசன் இடும் ஆணை பிரதான மந்திரி, மந்திரிகள், படைத்தலைவன், சேவகன் என்று பிரிந்து இறுதியாக குடிமக்களிற்கு செல்கிறதோ அதுபோல் பராசக்தி என்று மூல சக்தி இச்சா, ஞானா, கிரியா என்று பிரிந்து பின்னர் தத்துவங்கள் மேலும் பிளவுற அனந்த சக்திகளாக விரிவுறும்!
சுப்பிரமணியரை சக்திமான் ரூபத்தில் வழிபடும் போது
இச்சாக்தி வெளிப்படும் ரூபத்தை இச்சிதா எனவும்
கிரியா சக்தி வெளிப்படும் ரூபத்தை கர்த்தா எனவும்
ஞானசக்தி வெளிப்படும் ரூபத்தை நாதா எனவும்
அனந்த சக்தி வெளிப்படும் ரூபத்தை அனந்தர் எனவும் பெயர் பெறுவர்.
இந்த நான்கு நிலைகளும் ஒவ்வொரு முருக உபாசனும் தனது உபாசனையின் நோக்கத்தின் அடிப்படையில் தியானிக்க வேண்டும்.
இச்சா சக்தி வேண்டுபவன் இச்சிதாவையும்
கிரியா சக்தி வேண்டுபவன் கர்த்தாவையும்
ஞானசக்தி வேண்டுபவன் நாதா ரூபத்தையும்
அனந்த சக்தியை வேண்டுபவன் அனந்தராகவும் தியானித்து உபாசிக்க வேண்டும்.
எதையும் செயலாக்க, செயலில் வெற்றிபெற கிரியா சக்தி வேண்டும். இந்தக் கிரியாசக்தியைப் பெற இன்னுமொரு இரகசியம் உண்டு!
செந்நி, இரௌத்திரி, ஆரணி, ஈசானி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி என்ற எட்டுச் சக்திகளின் சேர்க்கையே கிரியா சக்தி.
இவற்றுள் செந்நி, இரௌத்திரி, ஆரணி ஆகிய மூன்றும் முருகப்பெருமானின் சூக்ஷ்ம உடலாகவும், மற்றைய ஐந்தும் ஸ்தூல வடிவமாகவும் தியானிக்க வேண்டும்.

Comments
Post a Comment